வணக்கஸ்தலங்கள்

இந்து ஆலயங்கள்

சித்தன்குறிச்சி முருகன் ஆலயம்

 இவ்வாலயம் நல்லூர் கந்த சுவாமி கோவிலில் இருந்து தலயாத்திரையாக வருகை தந்திருந்த குழுவினரை சேர்ந்த சித்தர் ஒருவரால் கட்டப்பட்டதாக ஐதீகம் இருந்து வருகிறது. பூவரசங்குளம் என்ற குளத்துக்கு அருகில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் தலவிருட்சமாக மருது, வேம்பு என்பன காணப்படுகின்றன.

இவ்வாலயத்தின் ஆரம்பம் பிரித்தானியர் காலத்துக்கு முன்னதாக இருக்கும் என நம்பப்படுகிறது. சுண்ணாம்பினால் ஆன கட்டிடம் காணப்படுகிறது. மூலஸ்தானத்தில் வேல் அமைந்துள்ளது. இவ்வேலானது நல்லூர் கந்தசாமி கோவிலின் பீடத்தில் உள்ள வேலுடன் ஒத்ததாக காணப்படுவதால் நல்லூர் கந்தசாமி கோவிலுடன் தொடர்பு நிறைந்ததாகவும் நம்பப்படுகிறது.

 மண்ணித்தலை சிவன் ஆலயம்

 சோழர் ஆட்சிக் காலத்தில் வட இலங்கையில் அரச தலைநகரங்களாக விளங்கிய மைக்கான சிறந்த துல்லிய சான்றாக மண்ணித்தலை சிவன் ஆலயம் விளங்குகிறது. இவ்வாலயம் பெருமளவு இடிந்த நிலையில் காணப்பட்டாலும் அக்கால கலைமரபை அறிந்து கொள்ள பெரிதும் உதவுகின்றன.

இங்கு லிங்கத்தையும், சூலத்தையும் தெய்வச் சின்னங்களாக கொண்டமைந்துள்ளது. இதனை விநாயகர் ஆலயமாகவே இவ்வூர் மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

கோறல்கல், செங்கல், சுதை என்பன கொண்டு அமைக்கப்பட்ட இவ்வாலயம் 21 அடி நீளத்தையும் 12 அடி அகலத்தையும் மூன்று தளங்களைக் கொண்ட 7 அடி உயரமான விமானத்தையும் கொண்ட சிறிய ஆலயமாகும். இதன் தேவகோஸ்டங்கள், கர்ணக் கடகள், குதம், சாலை, பஞ்சரம் என்பன அப்படியே சோழக்கலை மரபை ஒத்ததாக உள்ளன.

 கரடிக்குன்று பிரம்மம் ஆதிபராசக்தி நாகபூசணி அம்மன் ஆலயம்

 இவ்வாலயம் தொன்மை வாய்ந்த ஆலயமாகும். இதன் தோற்றம் குறிப்பிட முடியாத அம்பாளின் தரிசனத்தின் பின் பூசை ஆரம்ப நாள் 05.05.1995ஆம் ஆண்டாகும். ஆலய வளவில் நீண்ட காலங்களாக ஆலயத்தை பாதுகாக்கும் தெய்வீக சக்தி கொண்ட நாகங்கள் உள்ளன. இவைகள் இரத்தினக்கல் ஓளி கொண்டவை.

இதற்கான சான்றுகளும் இக்காட்சிகளை நேரடியாக கண்ட சாட்சிகளும் பல உண்டு. நோயாளிகள், தீய சக்திகளாலும் மந்திர மாய சக்திகளாலும் தூண்டப்பட்டோர்களும் அம்பாளை வழிபட்டு விடுதலை பெறும் தலமாகும். இத்தலத்தில் ஆத்மீக பூசையே நடைபெறுகின்றது.
ஆலயத்தின் மூலக்கருவாக பிரம்மம் அம்மா இருக்கிறார்.

இதற்கு உருவம் இல்லை நீரினால் கழுவி மாலை அணிவித்து தீபம் காட்டி மலர்களால் அர்ச்சனை செய்தல் ஆத்மீக பூசையாகும். பொங்கல், படையல், நூல் கட்டுதல் தேங்காய் உடைத்தல், திருநீறு இடுதல், பட்டு சாத்துதல், தீய தெய்வ வழிபாடுகள், காவடி எடுத்தல் போன்ற முறைகள் விலக்கப்பட்டுள்ளன. ஆலயத்தின் திருவிழா ஆத்மீக முறைப்படி கொடியேற்றமும் பூசையும் நடைபெறும் ஆலயத்திற்கு தேர், சப்பரம், வாகனம் எதுவும் செய்யக் கூடாது இன மத மொழி சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு அப்பால் மானிடரே தன்னை சுமக்க வேண்டும் என்பது அன்னையின் ஆணை. திருவிழாவில் ஆண் பெண் இருபாலரும் அன்னையை சுமந்து செல்லலாம். அனைவரும் சிவப்பு நிற ஆடை அணிய வேண்டும்.

 செல்லையாதீவு அம்மன் ஆலயம்

 இது பூநகரி பிரதேசத்தில் செல்லக்குறிச்சி கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ள ஆலயமாகும். கண்ணகி மதுரையை எரித்துவிட்டு பல இடங்களுக்குச் சென்றதாக ஐதீகங்கள் கூறுகின்றன. இலங்கையில் தரிசித்து சென்ற தலங்களில் இதுவும் ஒன்றாக கூறப்படுகின்றது. பூநகரியில் மறவர் குறிச்சி எனும் கிராமத்தில் மறவர் பரம்பரை மக்கள் கமம் செய்வதும், கால்நடை வளர்ப்பதும், தமது தொழிலாக செய்து வந்தனர். இக்காலத்தில் பூநகரியில் திருப்பாதம் ஊன்றிய கண்ணகி மறவன் குறிச்சி கிராமத்தில் பத்தினி காடு என்றும் தற்போது கூறப்படும் இடத்தில் களைப்பாறிய போது ஒரு வயோதிப பெண்ணிடம் கதைத்து விட்டு திடீரென மறைந்ததாக வாய்மொழிக் கதை உள்ளது.


அதே நாள் மறவன் குறிச்சி மாடு மேய்க்கும் இடையர்கள் செல்லையா தீவில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது அங்கு நின்ற கொன்றல் மரத்தடியில் கிழவி வடிவில் கண்ணகி அமர்ந்தவாறு சிறுவர்களை அழைத்து தனக்கு பசிக்கின்றது என்று கேட்டு சாப்பாட்டுப் பொருட்களை வரவழைத்து சிறுவர்களுக்கு கொடுத்து நெல் விதைக்கும் போது விதைத்தநாள் அபிஷேகம் பயிர்களின் நலன் வேண்டி பயிர் பொங்கல் படைக்கும் போது கிழவி மறைந்ததாக சிறுவர்கள் பெரியவர்களிடம் கூறிய போது வந்தது அம்மன் என கொன்றல் மரத்தடியில் பூஜை வழிபாடுகள் செய்து வந்தனர்.

இவ் வழிபாட்டுத் தூய்மையால் இம்மக்கள் எல்லோரும் செல்வ செழிப்பு உள்ள மக்களாக வாழ்கின்றனர்.

நல்லூர் மேளாய் கண்ணகி அம்மன் ஆலயம்

 நல்லூர் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள இக்கோயில் நான்கு சந்ததிக்கு முன்பே தோற்றம் பெற்றதாக கூறப்படுகின்றது. ஊர் பெரியவர் ஒருவருக்கு கனவின் வாயிலாக ஒரு இலுப்பை மரத்தின் கீழ் பிரம்பு, பூக்கோட்டான், சிலம்பு இருப்பதாக அம்மன் தரிசனம் காட்டினர். மறுநாள் பெரியவர் சென்று பார்த்தபின் அவ்விடத்தில் மடாலயம் கட்டப்பட்டது.

இவ்வாறு தோற்றம் பெற்ற இவ்வாலயத்தில் தீமிதித்தல் முக்கிய நிகழ்வாகும். மழையை பெறுவதற்காக, நிறுத்துவதற்காக சீலையில் காசினை முடிந்து ஒரு பானையால் மூடி நேர்த்தி செய்து பலனை பெற்று வருகிறார்கள்.

முழங்காவில் ஸ்ரீ செல்வயோக சித்திவிநாயகர் ஆலயம்

 முழங்காவில் பிரதேசத்தில் ஸ்ரீ செல்வயோக சித்திவிநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. ஆரம்பத்தில் வழிப்போக்கர்களால் ஒரு பிள்ளையார் சிலை வைத்து ஆதரிக்கப்பட்டு காலப்போக்கில் ஆலயமாகத் தோற்றம் பெற்றது. வடக்கு,தெற்கு பாதையில் இருந்து வந்தமையால் இவ் விநாயகர் ஆலயம் மேற்குத் திசையைப் பார்த்தபடி ஆகம விதிகளுக்கு உட்படாமல் அமைந்து காணப்படுகின்றது.

இவ்வாலயத்திற்கு அருகே பழமை வாய்ந்த கிணறு விநாயகருக்கு அபிஷேகம் செய்ய முடியாதவாறு இருந்ததால் பூசகர் மனம் வருந்திய போது மின்னாமல் முழங்காமல் இடி விழுந்ததால் நன்னீர் ஊற்றாக மாறி இன்று வரை வற்றாத புனிதத் தீர்த்தமாக இருந்து வருகின்றது. மின்னாமல் முழங்காமல் இடி விழுந்தமையாலே முழங்காவில் என இடுகுறிப் பெயர் கொண்டு இவ்வூர் அழைக்கப்பட்டதுடன் முழங்காவில் பிள்ளையார் கோவில் எனவும் அழைக்கப்பட்டது 1964 ஆம் விநாயகர் மூலஸ்தானம் கட்டப்பட்டு 1986 ஆம் பின் அதிகளவு நிதி கொண்டு புணர் நிர்மானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

திருக்கதீஸ்வரம் செல்லும் அடியவர்களின் முதல் வணக்கஸ்தலம் என்பதுடன் திருக்கேதீஸ்வரம் சென்று திரும்பி வரும் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கும் ஓர் ஆலயமாகவும் விளங்குகின்றது.

 பத்தினிப்பாய் பிள்ளையார் ஆலயம்

 பூநகரி பிரதேசத்தில் மன்னர் வீதிக்கு குறுக்காகச் செல்லும் மண்டக்கல்லாறு எனும் இடத்திலிருந்து வடகிழக்கு மூலையாக 4 மைல் தொலைவில் காடும் குளமும் கொண்ட பக்தர்கள் கூடி பொங்கல் செய்து வழிபடும் இடமே பத்தினிப்பாய் ஆகும். இவ்வாலயத்தில் பிள்ளையார், முருகன், அம்மன் எனும் பிரதான தெய்வங்களுடன் வைரவர், முனி, ஐயனார், விறுமர், காளி, கன்னிமார் என்னும் தெய்வங்களுக்கு 6 கொல்லைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இத்தெய்வங்களுக்கு வளந்து வைத்து பொங்கல் செய்வது பாரம்பரிய முறையாகும். பொங்கல் விழாவானது ஆனி மாதத்தில் மூன்று நாட்கள் நடைபெறும். இங்கு காவடி, தீமிதிப்பு, பாற்செம்பு, கற்பூரச்சட்டி போன்ற நிகழ்வுகளுடன் அன்னதான நிகழ்வு இடம்பெறும். இங்கு பொங்கல் நடந்த மறுநாள் மோதக பூஜை இடம் பெறும். இங்கு நெய், எண்ணெய், நீர் போன்றவற்றின் ஊடாக பொரித்து, அவித்து பிள்ளையார் உருவச் சிலைக்கு மேல் மலைபோல் குவிக்கப்படும்

   Church

   Mosque

 Cultural Forums

 Artist 

    

Scroll To Top